ஜோதிடத்தின் பெயரால் மோசடிகள்

Posted on

முன்னுரை:
தனி நபர்களான குடுகுடுப்பைக்காரர்கள், நடைபாதையில் “பொழப்ப” பார்க்கும் கிளி ஜோதிடர்கள், புரோகிதத்துடன் உபரி வருமானம் கிடைக்கிறதே என்று இதில் தலை கொடுக்கும் பிராமணர்கள், தாங்கள் விக்கிரக ஆராதனை செய்வதாலேயே அவரது படைப்பான கிரகங்கள் தங்களுக்கு ரெம்ப க்ளோஸ் என்ற எண்ணத்துடன் “மேனேஜ்”செய்யும் அர்ச்சகர்கள், என் போன்று இதர சாதியில் பிறந்தாலும் பித்தாகி , பின் ஜோதிடர்களாய் மாறும் ஜோதிடர்கள், எங்களிலேயே தொழில் காரணமாய் கிடைக்கும் அங்கீகாரத்தால் அவாளாகவே மாறிவிட்ட பூச்சிகள் , அரைகுறைகள் முதல் கிராமப்புற ஜோதிடர்கள் வரை சிறிய அளவில் செய்யும் மோசடிகள் ஒருபுறம்.

நகரங்களில் ஏ.சி வசதியுடன் ஆஃபீஸ் ,தனியார் தொலைக்காட்சிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள், ஆயிரக்கணக்கில் ஃபீஸ் என்று பட்டையை கிளப்பும் கார்ப்போரேட் ஜோதிடர்களின் மோசடிகள் ஒரு புறம் ,

பத்திரிக்கைகள், இணைய தளங்கள் தெரிந்தோ தெரியாமலோ துணை போகும் மோசடிகள் மறுபுறம். இப்படி பல முனை தாக்குதல்கள் நடக்கின்றன.

(இவை கூட சில நேரம் பலித்துவிடுகின்றன. சில நேரம் பலித்துப்போனதாலேயே மக்கள் விளக்கை நாடும் விட்டில் பூச்சிகள் மாதிரி மீண்டு மீண்டும் வட்டமிடுகின்றனர். வாட்டமடைகின்றனர். இது எப்படி என்பதை பின்னொரு சமயம் தனிப்பதிவாகவே இடுகிறேன். இப்போதைக்கு அம்பேல்)

இவை மக்களை தவறான வழியில் நடத்துவதோடு ஜோதிடத்தின் நம்பகத்தன்மையையும் குலைத்து வருகின்றன. ஜோதிடத்தின் பெயரால் நடை பெறும் மோசடிகளை விவரிப்பதும் , இவற்றிலிருந்து தப்ப வாசகர்களுக்கு சில டிப்ஸ் தருவதும் இக்கட்டுரையின் முககிய நோக்கம்.

ஜோதிடத்தின் பேராலான மோசடிகளை வெளிச்சம் போடுவது ஒரு ஜோதிடனாய் , ஜோதிட ஆய்வாளனாய் என் கடமை. அவற்றிலிருந்து தப்ப வழி கூறுவது ஒரு மனிதனாய் என் கடமை. ( இதை சேம் சைட் கோல் என்பீர்களோ? கோடாரிக்காம்பு என்று சக ஜோதிடர்கள் வைவார்களோ? அல்லது ” இவாள் சொல்லிண்டா அது ஆராய்ச்சி நாம சொன்னா ஏமாத்தா” என்று அவாள் திட்டி தீர்ப்பார்களோ? அதது அவரவர் விருப்பம்.

இனி கட்டுரைக்கு போயிரலாமா?

எது தமக்கு அன் அவெய்லபிளாக இருக்கிறதோ அதற்காக தவிப்பது மனித மனதின் இயற்கை. எதிர்காலம் குறித்த அறிவும் அன் அவெய்லபிள். எனவே தான் மனிதர்களுக்கு ஜோதிடத்தின் மீது இத்தனை கவர்ச்சி. டிமாண்ட் சப்ளை தியரி படி ஒரிஜினல் சரக்குக்கான சப்ளை ரெம்ப ரெம்ப குறைச்சலாக இருக்கிற காரணத்தால் ஜோதிடர்களும், பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகளின் ஜோதிட சிறப்பு பகுதிகளும் கடை பரப்பும் போலி சரக்குகள் சக்கை போடு போடுகின்றன.

கவர்ச்சிக்கு காரணம்:

மேலும் எதிர்காலம் குறித்த அறிவை பற்றி சிந்திக்கும்போது அது ஏதோ ஒரு காலத்தில் நமக்கு 100 சதவீதம் அவெய்லபிளாக இருந்துள்ளது. எப்படியோ அதை இழந்து விட்டோம் என்ற உள்ளார்ந்த உணர்வு நமக்குள் இருக்கிறது. அதை திரும்பபெற வேண்டும் என்ற வெறியும் இருக்கிறது .( ஆம் தற்போதும் அது அவெய்லபிள்தான். ஆனால் நமது மூளையில் உள்ள ஆழமான பகுதிகளில் அது புதைந்துள்ளது. அகந்தை /ஈகோ என்ற திரைக்கு பின்னால்) . தியாகய்யர் மாதிரி ” தெர தீயகராதா”ன்னு உயிர் உருக பிரார்த்தனை செய்தால் அதுவாய் விலகலாம். விலகினால் எதிர்காலம் தரிசனமளிக்கலாம்.

முக்கால ஞானம் :

ஆம். முக்கால ஞானம் அனைவருக்கும் இருந்தது . ஏன் இப்போதும் உள்ளது. என்ன ஒரு அசௌகரியம் என்றால் அது வறண்டு வரும் நிலத்தடி நீர் மாதிரி சற்றே ஆழத்துக்கு போய்விட்டது . யூனிவர்சல் மைண்ட் ,இண்டிவியூஜுவல் மைண்ட் இந்த இரண்டு விஷயங்களையும் , இவற்றிற்கிடையே உள்ள வித்யாசத்தை தெரிந்து கொண்டால் நான் சொல்லவரும் விசயம் தெளிவாக புரியும்.

யூனிவர்சல் மைண்ட் & இன்டிவீஜுவல் மைண்ட்:

குழந்தை பிறக்கிறது. அதற்கு தன்னையும், தன்னை சுற்றியுள்ள பொருட்களையும் வேறுபடுத்தி பார்க்க தெரியாது. ஆனால் சுற்றியுள்ளவர்கள் அதன் மூளைக்குள் தான் என்ற எண்ணத்தை புகுத்துகிறோம். அதுவரை தான், தன்னை சுற்றி உள்ளவர்கள், தான் வாழும் இந்த பூமி, நவ கோள்க்ள், பால் வீதி இத்யாதிகளின் முக்காலத்தையும் உள்ளடக்கிய யூனிவர்சல் மைண்டுடன் இந்த பூமிக்கு வந்த குழந்தையின் மூளைக்குள் நாம் புகுத்தும் “தான்” என்ற எண்ணம் சென்று மூளையின் கோடானு கோடி யூரான்களில் முக்காலம் உணர்த்தும் நியூரான் களை தூக்க நிலையில் ஆழ்த்திவிடுகிறது.

இழந்ததை பெறவே துடிப்பு:

நாம் ஒவ்வொருவரும் முக்காலம் உணர்த்தும் யூனிவர்சல் மைண்டுடன் இம்மண்ணுக்கு வந்தவர்கள்தான்.பாழாய் போன ஈகோ நம் மூளைக்குள் நுழைந்து (பெற்றோராலும், ஆசிரியர்களாலும் நுழைக்கப்பட்டு) அது இண்டிவியூஜுவல் மைண்ட் ஆக்கிவிட்டது. இதனால்தான் முன்னொரு காலத்தில் நாம் பெற்றிருந்த செல்வம் என்ற காரணத்தால்தான் நம்மில் ஒவ்வொருவருக்கும் ஜோதிடத்தின் பேரில் இத்தனை ஈர்ப்பு.

இந்த முக்கால ஞானம் குறித்த ஈர்ப்பு சாதாரணர்க்கே அதிகம் என்றால் புத்திசாலிகள், பற்றி வேறே சொல்வதற்கென்ன இருக்கிறது. இதனால் தான் தமது துறையில் புலிகளாக விளங்கும் அறிவு ஜீவிகள்கூட ஜோதிடத்தின் பால் ஈர்க்கப்பட்டு ,ஜோதிடர்களால் ஏமாற்றப்படுகின்றனர். இந்த ஈர்ப்புக்கு மற்றொரு காரணமும் உள்ளது. ஜோதிடம் என்பது லாஜிக்கல் கேல்குலேஷன் தான் என்று என் போன்றவர்கள் கையில் அடித்து சத்தியம் செய்வதே.

என்னதான் பெரியார் குறித்த பயத்தால் இப்படி என் போன்றவர்கள் வாதனை செய்தாலும் அதில் ஒரு வித “நிச்சயமற்ற தன்மை” “இருண்மை தன்மை” இருக்கத்தான் செய்கிறது. அதுதான் மனிதர்களை தன் பால் ஈர்க்கிறது.

உண்மையில் ஏமாற்றுவதே அவர்களின் நோக்கமா ?

இல்லை என்றுதான் கூற வேண்டும் . அறியாமை – போதாமை என்று வேண்டுமானால் சொல்லலாம் . எதிர்காலம் என்பது தேவரகசியம். யாருக்கு இதன் பால் ஆர்வமில்லையோ அவர்களுக்கு மட்டுமே இது தரிசனமளிக்கும் . ஓஷோ சொல்வது போல் அந்தந்த நொடியில் வாழ்பவருக்கு தான் எதிர்காலத்தின் மேல் ஆர்வமிராது. யார் மனதில் அகந்தை இல்லையோ, யார் மனதில் சுய நலம் எள்ளளவும் இல்லையோ அவர்களுககு தான் எதிர்காலத்தின் மேல் ஆர்வமிராது.

அந்த ஆர்வமற்றவர்களுக்குதான் எதிர்காலம் தரிசனமளிக்கும். இந்த எளிய உண்மை சாதாரண மக்களை போலவே ஜோதிடர்களுக்கும் புரிவதில்லை. இதனால் தான் எதிர்காலம் குறித்த அறிவு என்பது குருவித்தலையில் பனங்காய் ஆகிவிடுகிறது. மேற்சொன்ன விவரங்கள் தெரியாது ஜோதிடர்கள் ஜோதிடம் சொல்ல ஆரம்பித்து விடுகிறார்கள் . இதனால் அவர்கள் ஏமாற்றுவதை நோக்கமாக கொண்டில்லாத போதிலும் அவர்கள் கூறும் ஜோதிடம் பல்லை இளித்து ஏமாற்று வேலையாகிவிடுகிறது.

அறிவியல் கண்ணோட்டமில்லை:

முதற்கண் மக்களும் ஜோதிடர்களும் ஜோதிடம் குறித்த அறிவியல் கண்ணோட்டத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். முன் சொன்னாற்போல் யார் மனதில் அகந்தையோ,சுய நலமோ எள்ளளவும் இல்லாமலிருந்தனவோ அந்த ரிஷிகள்,மகரிஷிகள் கிரகங்களின் சஞ்சாரத்தையும், அவை மக்கள் கூட்டத்தின் உடல்,மனம்,புத்தி மேல் ஏற்படுத்தும் பாதிப்புகளையும் தொகுத்து எழுதி வைத்துள்ளனர். அவற்றை கூட உருப்படியாக படித்தறியாமல் ஐந்தோ பத்தோ ஜோதிட பழமொழிகளை மட்டும் தெரிந்து வைத்து கொண்டு ஜல்லியடிப்பது தவறு.

கோசார பலன்கள்:

தினசரி,வார, மாத பத்திரிக்கைகளில் வெளி வரும் பலன்கள் யாவுமே கோசாரத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்படுகின்றன. கோச்சார பலன் என்பது தற்போது உள்ள கிரக நிலையை பொருத்து கூறப்படுவதாகும் . ஜாதகர் பிறந்தபோது இருந்த கிரக நிலையை பொருத்து ஜாதகம் கணிக்கப்படுகிறது . ஓஷோ கூறுவது போல் தாயின் மணிவயிறு ஒரு கேமரா . ஷட்டர் திறந்து எதிரிலுள்ள காட்சி ஃபிலிமில் பதிவாவது போல் சகல பாதுகாப்புகளுடன் தாயின் வயிற்றிலிருந்த குழந்தை வெளியே வந்ததுமேஅந்த நேரத்து கிரக ஸ்திதி அக்குழந்தையின் மீது அழுத்தமான முத்திரையை பதித்து விடுகிறது. அதற்கு பின் மாறும் கிரக நிலைகளின் (கோசாரம்). பாதிப்பு என்பது புகைப்படத்தின் மீது படியும் தூசு போன்றதே.
ஆனால்பத்திரிக்கைகளும், இணைய தளங்களும் இதனை பெரிய விசயமாக்கி பலன்களை விரிவாக வெளியிட்டு தம் வியாபாரத்தை பெருக்கிக்கொள்கின்றன

கோசாரம் Vs தசாபுக்திகள் :

ஜாதகத்தை வாகனத்தோடு ஒப்பிட்டால் கோச்சாரத்தை சாலைக்கு ஒப்பிடலாம். மோசமான சாலையில் (தற்கால கிரக நிலை) பயணித்த மாத்திரத்தில் நல்லதொரு வேகம் குறைந்து விடாது , புகையை கக்க ஆரம்பித்து விடாது . சக்கரங்கள் கழண்டு போகாது வாகனம் கவிழ்ந்து விடாது. ஏனெனில் அந்த வாகனத்தில் அதற்கான ஏற்பாடுகள் ( உதாரணமாக :ஷாக் அப்ஸர்வர்ஸ்) அற்புதமாக அமைந்திருக்கும்.

மோசமான ஒரு வாகனம் என்ன தான் சிக்ஸ் ட்ராக் சாலையில் பயணித்தாலும் அதன் வேகம் அதிகரித்துவிடப்போவதில்லை. இந்த எளிய உண்மையை அறியாது அல்லது இருட்டடிப்பு செய்து கோசார பலன் களை வெளியிடுவதும். அவை தவறும்போது வாசகர்கள் ஜோதிடத்தையே விமர்சிப்பதையும் பார்த்துக்கொண்டு தானிருக்கிறோம். இதனால் ஜோதிடத்தின் நம்பகத்தன்மையே குறைந்து விடுகிறது.

(பேர்) ராசி பலன்கள்:

ஜாதகர்கள் தாம் பிறந்த நட்சத்திரம் ,பாதம் பிரகாரம் ராசிகளுக்கு அறிந்து கொள்ளும் கோசார பலனே முட்டாள்தனமானது என்று நான் கூறுகிறேன். ஆனால் பல ஜோதிடர்கள் ஜாதகர் வந்து அமர்ந்ததும் பெயரை கேட்டு பலன் சொல்லி முடித்து விடுகின்றனர். நாய்க்கு டைகர் என்று பெயர் வைத்த மாத்திரத்தில் அந்த நாய் புலியாகிவிடுமா என்ன ? பெயர் என்பது LABLE மட்டுமே ..ஜாதகப்படி வைக்கப்பட்ட பெயருக்கு சொல்லும் பலனே 10 முதல் 20 சதவீதம் தான் பலிக்கும் என்ற நிலையில் இந்த பேர் ராசி பலன் களை என்னென்பது ?

திருமண பொருத்தம்:

தனிப்பட்ட பலன்களை ஏறுமாறாக கூறித்தொலைத்தாலும் ஓரளவு மன்னிக்கலாம். ஆனால் ஜோதிடர்களில் பலர் திருமணத்துக்கு பொருத்தம் பார்க்கும்போதும் வெறுமனே நட்சத்திரத்துக்கும், பெயருக்கும், செல்லப்பெயர், தொட்டிலில் போட்டபெயர் , அந்த கணம் முடிவு செய்த பெயர்களுக்கு பொருத்தம் பார்த்து பச்சைக்கொடி காட்டிவிடுகிறார்கள். இது அந்த மண மக்களுக்கே அல்ல அவர்கள் குடும்பத்துக்கும் , ஜோதிடத்துக்கும் செய்யும் துரோகமாகும். இப்படி டுபாகூர் பொருத்தங்கள் பார்த்து திருமணம் செய்து அவதி படுவதை விட சாமி முன்னே பூ போட்டு பார்த்து முடிவு செய்யலாம். அந்த சாமியாவது காப்பாற்றும். அல்லது பெரியார் வழிக்கு சென்று மருத்துவ சோதனை (முக்கியமாக ஹெச்.ஐ.வி ) செய்து முடிவெடுத்தால் பகுத்தறிவு வாதியென்ற பட்டமும் கிட்டும். ஐயா அவர்களின் புனித ஆத்மாவாவது அந்த தம்பதிகளை காக்கும். (ஈஸ்வரோ மனுஷ்ய ரூபேணா /மானவ சேவா மாதவ சேவா என்று வாழ்ந்த ஐயா அவர்களின் ஆத்மாவுக்கு அந்த சக்தி நிச்சயம் உண்டு)

அடைந்தால் மகா தேவி

ஒன்று ஒழுங்காக ஜாதகம் பார்த்து தோஷங்களை ஆராய்ந்து அதன் பிறகு நட்சத்திர பொருத்தம் பார்த்து ரஜ்ஜு,நாடி வெவ்வேறாக வந்தால் திருமணம் செய்ய வேண்டும். இல்லையா ஒன்று சாமி அல்லது ராமசாமி ! (பெரியார்) வழியை பார்த்துக்கொள்ள வேண்டும். அதை விட்டு டுபாகூர் ஜோதிடர்களிடம், டுபாகூர் பொருத்தம் பார்த்து திருமணம் செய்வது முட்டாள்தனம் மட்டுமல்ல கேணத்தனம்.

ஆஹா ! ஓஹோ ! பலன்கள்:

சில ஜோதிடர்கள் முகஸ்துதி செய்தே ஜாதகர்களை ஒழித்து கட்டிவிடுவார்கள். வெறுமனே சில பாடல்களை பாடி அந்த யோகம் இந்த யோகம் என்று அளந்து விடுவார்கள். அடிப்படையான விஷயங்களை மறைத்து விடுவார்கள். ஜாதகத்தில் ஆயிரம் யோகங்கள் இருந்தாலும் அதை அனுபவிக்கும் அமைப்பு அந்த ஜாதகத்தில் அமைந்திருக்க வேண்டும். முக்கியமாக லக்னம்,லக்னாதிபதி பலம் பெற்றிருக்க வேண்டும். லக்னம் முதல் 6,8,12 இடங்கள் காலியாக இருக்க வேண்டும். இந்த இடத்ததிபதிகள் லக்னாதிபதியை பார்ப்பதோ, அவருடன் சேர்வதோ கூடாது. முக்கியமாக லக்னாதிபதி நீசமடைதல், அஸ்தங்கதம் அடைதல் ,ராகு கேதுக்களுடன் சேருதல், பகை கிரகங்களுடன் சேருதல் இத்யாதி அமைப்புகள் கூடாது.

யோகத்தை அனுபவிக்க நிபந்தனைகள்:

ஏதோ ஒரு கிரகம் உச்சமானவுடனே அண்ட புளுகு,ஆகாச புளுகை அளந்து விட்டால் மயங்கி விடாதீர்கள். அந்த கிரகம் உங்கள் லக்னத்துக்கு யோககாரகனாகவோ ,கு.பட்சம் சுபனாகவோ இருக்க வேண்டும். நீசம்,ஹஸ்தங்கதம், மற்றொரு உச்சனால் பார்க்கப்படுவது போன்ற அவயோகங்கள் இருக்ககூடாது. நீங்கள் அந்த கிரகம் தொடர்பான துறை,தொழிலில் இருக்க வேண்டும். அந்த கிரகம் தொடர்பான மனிதர்களுடன் உறவாட வேண்டும். உங்களுக்கு இண்டியன் வங்கியில் கணக்கு திறந்து ஒரு நபர் அதி கோடி ரூபாய் போட்டிருந்தாலும் கு.பட்சம் ஏடிஎம் அட்டை வாங்கவாவது அந்த வங்கிப்பக்கம் போனால் தானே பணம் எடுக்க முடியும்.

நியூமராலஜி /நேமாலஜி :

அஸ்ட்ராலஜியில் கணக்கற்ற விதிகள் இருப்பதாலோ என்னவோ தொழில் முறை ஜோதிடர்களில் பலர் நியூமராலஜி /நேமாலஜிக்கு மாறிவிட்டனர். மக்களில் பலருக்கும்
முக்கியமாய் நடு வயதில்முன்னேறியவர்களுக்கும் பிறந்த தேதி இத்யாதி தெரியாத நிலையில் இவற்றிற்கு ஆதரவு பெருகி வருகிறது. (மேலும் ஜாதக நோட்டை தூக்கிகொண்டு அலையவேண்டி வராதே)

அஸ்ட்ராலஜி Vs நியூமராலஜி :/நேமாலஜி

அஸ்ட்ராலஜியில்கிரகங்கள், நியூமராலஜியில் எண்கள் அவ்வளவுதானே வித்யாசம் என்று நீங்கள் நினைக்கலாம். நியூமராலஜியில் உள்ள சிக்கல் என்ன என்றால் இதில் கூறப்படும் பிறப்பு எண் , கூட்டு எண், பெயர் எண்களுக்கு உரிய கிரகங்கள் உங்கள் ஜாதகத்தில் வலிமையுடன் வீற்றிருந்தால் தான் நியூமராலஜி நிபுணர் (?) கொடுக்கும் ரிசல்ட் ஒர்க் அவுட் ஆகும். இல்லையென்றால் நீங்கள் கொடுத்த காசு காக்கா தூக்கிட்டு போனமாதிரிதான். இதே விதிதான் நேமாலஜிக்கும். உதாரணமாக சுக்கிரன் சுபனாக பலனளிக்கும் ஜாதகத்தில் நீங்கள் பிறந்திருந்து , சுக்கிரன் நல்ல நிலையில் இருந்தாலன்றி நேமாலஜிப்படி செய்யும் பெயர் மாற்றங்கள் இத்யாதி காதலிலோ,
திருமணத்திலோ வெற்றியை தராது.

அனுபவ அறிவு:

மேற்படி ரிஷிகள்,மகரிஷிகள் எழுதி வைத்த விதிகளை மனப்பாடம் செய்து கொண்டுவிட்டால் மட்டும் போதாது. அவை அனுபவத்தில் எந்த அளவு பலிக்கின்றன என்பதையும் பார்க்கவேண்டும். அவர்கள் எதையோ தப்பாக எழுதியிருக்கக்கூடும் என்று நான் கூற வரவில்லை. அவர்கள் எழுதிய போது இருந்த அரசாங்கங்கள் வேறு, அன்றைய சமுதாயம் வேறு , அன்றைய வாழ்க்கை முறை வேறு, அன்றைய கல்வி முறை வேறு. குடும்ப அமைப்பு வேறு . அன்றைய மன அமைப்புகள் வேறு. அவர்கள் அந்த காலத்துக்கு பலன் எழுதி வைத்தார்கள். அவை இன்றும் அதே அளவில் உண்மையாகும் என்பதற்கு என்ன கியாரண்டி ? இதனால் தான் நான் என் ஜோதிட முறைக்கு அனுபவ ஜோதிடம் என்று பெயர் சூட்டியுள்ளேன். செவ்வாய் எட்டிலிருக்கிறார் என்று உடனே பலன் கூறிவிடாது அந்த செவ்வாய் கிரகம் கடந்த காலத்தில் தன் புக்திகளில் எந்த அளவு பாதித்துள்ளது என்பதை ரஃப் கேல்குலேஷன் மற்றும் கணிப்புகள் மூலம் கேள்விக்கணைகள் தொடுத்து அறிய வேண்டும் .ஜாதகரின் கல்வி,வேலை,குடும்ப பின்னணி, இவற்றையும் கருத்தில் கொண்டு பலன் கூற வேண்டும் .இதுவே அனுபவ ஜோதிடம் .

அவ்வாறன்றி “அமாவாசை இருட்டில் பெருச்சாளிக்கு போனதெல்லாம் வழி என்பது போல் பலன் சொல்லும் ஜோதிடர்களால் ஜோதிடத்தின் மீதான நம்பிக்கை நசிந்து போவதோடு ,தவறான வழி காட்டுதலால் கெட்டுப்போனவர்களின் சாபமும் வந்து சேரும்.

அடுத்த பதிவு:
அடுத்த பதிவில் ஜோதிடத்துக்கும் வாஸ்துக்கும் உள்ள தொடர்பென்ன ? வாஸ்து பெயரால் நடைபெறும் மோசடிகள் என்ன என்பதை விவரிக்க உத்தேசம்.நான் ரெடி நீங்க ரெடியா ?

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s